×

நாலூர், திருச்சேறையில் முள்ளங்கி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

திருவிடைமருதூர், ஜன. 3: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் நாச்சியார்கோயில் அடுத்த நாலூர், திருச்சேறை, செம்மங்குடி, பந்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இங்கு குறைந்த அளவில் நிலப்பரப்பு மற்றும் தண்ணீரை கொண்டு சாகுபடி செய்யக்கூடிய காய்கனி பயிரான முள்ளங்கியை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து முள்ளங்கி சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில், முள்ளங்கி சாகுபடி செய்ய குறைந்த நிலபரப்பு இருந்தாலே போதுமானது. அதன் காரணமாக இப்பகுதியில் குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள சிறு விவசாயிகள், முள்ளங்கியை ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாய நிலத்தை நன்றாக உழுது பின்னர் பட்டம் பட்டமாக பாத்தி அமைத்து லேசாக தண்ணீர் விட்டு பின்னர் முள்ளங்கி விதையை விதைப்போம். 5 நாட்களில் முளைப்பு வந்தவுடன் லேசாக தண்ணீர் தெளிப்போம். இதேபோல் 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை தெளிப்போம். பிறகு 25வது நாட்களில் களை வெட்டி பிரித்தெடுத்து தொடர்ந்து தழைச்சத்தான யூரியாவை இட்டு தண்ணீர் பாய்ச்சுவோம். 30வது நாளில் சாறு உறிஞ்சும் பூச்சுகளை கட்டுப்படுத்த ஒரு முறை மட்டும் கைத்தெளிப்பானை கொண்டு மருந்து தெளிப்போம். 40வது நாள் முதல் அறுவடைக்கு தயாராகி விடும். படிபடியாக 60 நாட்களில் அறுவடை முடிந்து விடும். 100 குழிக்கு 1,500 கிலோ வரை
மகசூல் கிடைக்கும். விதை விடுவது, உரமிடுதல், களை வெட்டுதல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் என 100 குழிக்கு ரூ.6 ஆயிரம் வரை செலவாகும். நல்ல விலை போனால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விலை போகும். செலவுத்தொகை போக ரூ.15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். குறைந்த நிலப்பரப்பு மற்றும் குறைந்த தண்ணீர் குறைந்த நாட்களில் மகசூல் என்பதால் விவசாயிகள் ஆர்வமாக சாகுபடி செய்து வருகின்றனர்.

Tags : Tirur ,
× RELATED நீட் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றலாமா?: பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு